Friday, February 14, 2014

வேண்டும் இணைப்பு

  கடந்த மாதம் மத்திய அமைச்சரவை கென் - பெட்வா நதிநீர் இணைப்புத் திட்டத்தை தாற்காலிகமாக ஒத்திவைக்கத் தீர்மானித்தது அரசியல் சூழல் காரணமாக பரவலாக மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. இந்த திட்டம் மட்டுமல்லாமல், மத்திய அரசின் பரிசீலனையில் இருக்கும் ஏனைய 30 நதிநீர் இணைப்புத் திட்டங்களும், இனிமேல் அடுத்து பதவி ஏற்கும் அரசின் முடிவுக்குக் காத்திருந்தாக வேண்டும்.
  கென், பெட்வா ஆகிய இரு நதிகளுமே விந்திய மலையில் உருவாகி, யமுனையில் கலக்கும் அதன் துணை நதிகள். மத்தியப் பிரதேச மாநிலம் ஹோஷங்காபாதுக்கு வடக்கில் உருவாகி, வட கிழக்காகப் பாய்ந்து, மால்வா பீடபூமி வழியாக உத்தரப்பிரதேச மாநிலம் ஹமீர்பூர் அருகில் யமுனையில் கலக்கிறது பெட்வா நதி. கென் நதி மத்தியப் பிரதேசம் ஜபல்பூர் அருகில் உருவாகி உத்தரப் பிரதேசம் பதேபூர் அருகில் யமுனையில் கலக்கிறது.
  இந்த நதிகளை இணைக்கும் திட்டத்திற்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்து, மத்தியப்பிரதேசம், உத்தரப் பிரதேசம், மத்திய அரசு மூன்றும் இணைந்து ஒரு முத்தரப்பு ஒப்பந்தமும் கையெழுத்தாகி இருந்தது. இந்த நிலையில்தான், நதிநீர் இணைப்பால் உயிரின வாழ்க்கைச் சூழலியலில் பாதிப்பு ஏற்படும் என்று ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்ததால், மத்திய அமைச்சரவையால் நதிநீர் இணைப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
  கங்கையையும் காவேரியையும் இணைக்கும் கார்லண்ட் கால்வாய் திட்டம் 1972இல் முன்வைக்கப்பட்டது. தின்ஷா தஸ்தூர் என்கிற பொறியாளரால் தயாரிக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு அப்போது கோரப்பட்ட நிதி ரூ.15,000 கோடி. இதன் மூலம் இந்தியாவின் சில பாகங்களில் காணப்படும் வறட்சியையும், அவ்வப்போது ஏற்படும் வெள்ளச் சேதத்தையும் எதிர்கொள்ள முடியும் என்பதால் இந்தத் திட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
  இமாலய நதிநீர் கால்வாய், தக்காண பீடபூமிக் கால்வாய் என்ற இரண்டு ராட்சதக் கால்வாய்கள்தான் இந்தத் திட்டத்தின் அடிப்படை. இமயமலையின் அடிவாரத்தில் ராவி நதிக் கரையிலிருந்து சிட்டகாங் வரையில் 300 மீட்டர் அகலமுள்ள ராட்சதக் கால்வாய் சுமார் 3,800 கி.மீ தூரத்துக்கு வெட்டுவது என்பது கார்லண்ட் கால்வாய் திட்டத்தின் முதல் பகுதி. இதன் மூலம் இமாலய நதிகளில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளச் சேதத்தை எதிர்கொள்வது குறிக்கோள்.
  தக்காண பீடபூமிக் கால்வாய் சம்பல் நதியில் தொடங்கி கன்னியாகுமரியில் முடிவடையும். ஒரு பெரிய மாலைபோல அமையும் இந்தக் கால்வாய் விந்திய மலைக்குக் கீழேயுள்ள மழை நீரை எதிர்நோக்கும் தென்னிந்திய நதிகள் அனைத்தையும் இணைப்பதாக அமையும். இமாலய நதிநீர் கால்வாய் இரண்டு இடங்களில் பெரிய குழாய்கள் மூலம் தக்காணப் பீடபூமிக் கால்வாயுடன் இணைக்கப்படும்.
  இமாலய நதிநீர் கால்வாய் கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் மேலேயும், தக்காணப் பீடபூமிக் கால்வாய் 500 மீட்டர் உயரத்திலும் இருப்பதால், இயற்கையாகவே தண்ணீர் மேலிருந்து கீழ்நோக்கிப் பாயும். இந்தக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்பட்டால், இந்தியாவில் விவசாயம் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்கொள்ளும்.
  1972இல் முன்வைக்கப்பட்ட கார்லண்ட் கால்வாய் திட்டத்தின் தொடர்ச்சியாக 1982இல் தேசிய நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் ஆய்வுப்படி 14 இமயமலை சார்ந்த நதிகளையும், 16 தக்காண பீடபூமி நதிகளையும் முதற்கட்டமாக இணைக்கும் முயற்சியில் ஈடுபடுவது என்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பிறகு முனைப்பும் முயற்சியும் எடுக்கவில்லை.
  இந்தியாவின் ஒற்றுமைக்கும் மாநிலங்களுக்கிடையேயான உறவுகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது நதிநீர் பிரச்னைதான். அதுமட்டுமல்லாமல், இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்னையும் பாசனத்துக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் இருப்பதுதான். ஆண்டுதோறும் இந்திய நதிகளிலிருந்து கடலில் போய் கலக்கும் தண்ணிரில் 20 விழுக்காடு இருந்தாலே போதும் இந்தியா மிகச் செழிப்பான நாடாக மாறிவிடும். அதனால் இந்தியாவின் அடிப்படை பிரச்னைக்கு நதிநீர் இணைப்பே தீர்வாக அமையும்.
  சுற்றுச்சூழல் பாதிப்பு, உயிரின வாழ்வியல் பாதிப்பு என்றெல்லாம் காரணம் கூறி நதிநீர் இணைப்பை எதிர்ப்பவர்கள், மணல் மற்றும் கனிமவளக் கொள்ளைக்கும் விளைநிலங்கள் குறைப்பிற்கும் வனப்பரப்பு அழிப்பிற்கும் உடந்தையாக இருக்கிறார்கள் என்பதுதான் நகைமுரண்.   இயற்கை அன்னையை எல்லா விதத்திலும் சீண்டி விளையாடுபவர்கள், நதிநீர் இணைப்பு பிரச்னையில் மட்டும் உத்தமர் வேடம் போடுகிறார்கள் என்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. அடுத்து அமையும் ஆட்சியிலாவது நதிநீர் இணைப்பு பற்றிய மறு சிந்தனை அவசியம்.
                                                                நன்றி : தினமணி
  இயற்கையன்னையின் வடக்கு நதிநீர்வளத்தை தெற்கு நதிகளோடு இணைப்பதன் மூலமே தென்னிந்திய விவசாய வாழ்வாதத்திற்கு ஒரு தீர்வாகவும் தென்னிந்திய மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் பங்கீட்டில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாகவும் அமையும் ஏனெனில் தமிழ்நாட்டில் பருவமழை பொய்த்து வருகிறது விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறி வருகின்றன. கால்நடை வளர்ப்பு குறைந்து வருகிறது விவசாயி தன் வாழ்வாதாரத்தை விட்டுச்செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான். இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதில் சில அடிப்படைப் பிரச்சனைகள் இருக்கலாம் ஆனால் அதை மேற்கொள்ளும் வகையில் பொறியாளர்களும் திட்டம் தீட்டூம் வல்லுநர்களும் தொழில்நுட்ப வசதிகளும் நம்மிடம் இல்லாமல் இல்லை. வாக்கு வங்கிளுக்காக மட்டுமே சட்டமியற்றும் நமது அரசியல்வாதிகள் இந்த தொலைநோக்குத் திட்டத்தை செயல்படுத்துவார்களா என்பதும் சந்தேகமே.
                                                                  .......வெங்கடேஷ்